செவ்வாய், 15 ஜூலை, 2014

ரமழான் 17 இல் பத்ர் போர்


இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.
மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஸியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில ௌகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. முஸ்லிம்கள் அன்றிரவு நிம்மதியாக உறங்கி விட்டு அடுத்த நாள் போராட்டத்துக்கு ரமழான் 17இல் முகம் கொடுத்தனர்.
போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஸியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு. இன்று இந்த சிறிய கூட்டம் அழிக்கப்பட்டால் பூமியில் உன்னை வணங்குவோர் யாரும் இருக்க மாட்டார்கள்’ நபியவர்களோடு இருந்த முஸ்லிம் போராளிகளில் முஹாஜிர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு உள்ளாயிருந்தனர். அவர்களில் சிலர் தமது பெற்றோருக்கு  எதிராகவும் வேறு சிலர் தமது பிள்ளைகளுக்கெதிராகவும் வேறு சிலர் தமது சகோதரர்களுக்கு எதிராகவும் போராட வேண்டி இருந்தனர். எனினும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
அந்த சமரில் சுமார் 305-313 இற்கு இடைப்பட்ட முஸ்லிம்கள் 1000 எண்ணிக்கையைக்  கொண்ட  எதிரிப்படைக்கு முகங்கொடுத்தனர்.எதிரிகளின் ஆயுத பலத்ததையும் ஆட்பலத்தையும் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் பலவினமானவர்களாக காணப்பட்டனர். முஸ்லிம்கள் எதிர்பாராத வகையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவி கிட்டியதன் காரணமாக அவர்கள் வெற்றி பெற்றனர்.
6 முஹாஜிர்களும் 8 அன்ஸாரிகளுமே கொல்லப்பட்டனர். எதிரிகளின் தரப்பில் அபூ ஜஹ்ல், உத்பா, உமையா, ஸம்ஆ, ஆஸ் போன்ற தலைவர்கள் உட்பட 70 பேர் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு இந்த யுத்தம் முஸ்லிம்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்து விட்டது.
சிறு தொகையாக இருக்கிறோம் என்பதால் ஈமான் கொண்டவர்கள் அச்சம் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு பத்ர் சமர் சிறந்த எடுத்துக்காட்டு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக